Wednesday, December 21, 2011

புதுக் கவிதை


புதுக் கவிதைகளின்,
புலன்கள் யாவும்,
பழைய காதலினால் மட்டும்,
புதுப்பிக்கப்படுகின்றன.
காதலும் தோல்வியும் தவிர,
பாடுபொருள் இல்லையோ?
இருந்தாலும் இளங்கவிகள்,
நாடுவது இல்லையோ?
....கந்தசுவாமி......

Friday, December 16, 2011

அன்னை


இலைமேல் மழையின் துளிபோல்,
மேனிமேல் வியர்வை ஒழுகும்.
உலையின் அடுப்புச் சூட்டில்,
உடலும் கொஞ்சம் கொதிக்கும்.
வெட்டிய காய்கறிகள் வேகும்.
வலியில் விரலும் நோகும்.
பானை நிறைய வடித்தவள்,
பருக்கை பொறுக்கி உண்பாள்.
நம் வயிறு நிறைவதில்,
அவள் மனம் நிறையும்.
அவள் தான் அன்னை.
....கந்தசுவாமி.......

Thursday, December 15, 2011

ஊருக்குப் போயிருக்கிறாள்


ஊருக்கு சென்ற காதலியின் நினைவில் ஒருவன் எழுதுவதாய் ஒரு கற்பனைக் கவிதை

உன்னிடம் பேசாத இரவெல்லாம்,
உறக்கம் பூசாமல் விழியிருக்க,
மூளை சூடாகி மூடிடுதே,
மூச்சு நீயின்றி கேவிடுதே.
சிரிப்பொலியும் சிணுங்கலும்,
சில்மிஷமாய் சண்டையும்,
சப்தமில்லாமல் நிறைத்தது தினமும் நெஞ்சினை.
தனிமையில் உந்தன் நினைவுகள் பஞ்சனை.
இருப்பினும் இருக்குதே உறக்கத்தின் வஞ்சனை,
இருகரம் இணைத்தெனை விரைவினில் வந்தனை.
நீ தொலைவில் இருக்கும் வேளையிலே,
என் தொலைபேசி அலுக்கும் வேலையிலே.
சிரிப்பை சிலநாள் காணவில்லே,
சீக்கிரம் வந்திடு வானவில்லே.
......கந்தசுவாமி.....

Thursday, December 8, 2011

ஹைக்கூ சாரல்

காதலில் தோற்ற பெண்கள் மதுக்கடை செல்லவில்லை.
தாடியும் வைத்து தாஜ்மகால் கட்டவில்லை தெருவில் தறிகெட்டுத் திரியவில்லை.
ஏனெனில் அதற்குக்கூட உரிமையில்லை அவர்களுக்கு அந்நாளில்.
......கந்தசுவாமி.........

கண்டேன் அறிவிப்பொன்று காதலைக் காணவில்லை என்று.
கண்டுபிடிக்கத் தேடினேன் பெண்களிடம் ஆண்களிடம் பெற்றோரிடம் அவர்தம் பிள்ளையிடம்
பணம்தேடும் அவசர வாழ்க்கையில் கேட்பாரற்றுப் புதைந்திருக்கிறது.
......கந்தசுவாமி........

முட்களை முன்னுரையில் வாசிக்கும் முரட்டுத்தனமாய் உலகமிது.
முரண்பாடு சொல்வார் இவர்கள் முறையாக மண்மேல் எவனொருவன் வாழ்ந்தாலும்.
நன்மைகளை நகைக்கும் உண்மைகளை உதைக்கும் இக்கூட்டம்.
.......கந்தசுவாமி.......

Saturday, December 3, 2011

என்நாள் வந்திடும் என்னால்.


கறைகளில் நனைந்து,
சிறைகளில் அடைந்து,
சிதைந்த மனமே,
சிலவரி கேள்.
தலை குனியும் தருணம் எல்லாம்,
தரை உணரும் தவமென கொள்வாய்.
தடுமாறி நிலை குலைந்தாலும்,
தடம்மாறி நிலை இழக்காதே.
ஊரைச் சுற்றும் சக்கரம் எல்லாம்,
சேரைத் தூற்றி என்மேல் அடிக்கும்.
சேர்ந்து இருக்கும் சிலரும் தொடுப்பர்,
சிரிப்புப் பேச்சில் நஞ்சின் அம்புகள்.
சிரித்துக் கொண்டு செல்வேன் நானும்,
சிவந்த விழியும் மனமும் வலிக்கும்.
நேற்றின் கனவுகள் தோற்றுப் போகலாம்,
ஊற்றும் ஆசைகள் உறைந்து போகலாம்.
காற்றில் கரைய நான் பாஸ்பரம் இல்லை,
தோற்றுப் போயினும் தொய்வதே இல்லை.
அறைதனில் அடைந்திட மாட்டேன்.
மூலையில் முடங்கிட மாட்டேன்.
எந்நாள் வருமோ என்நாள்?
அந்நாள் வந்திடும் என்னால்.
.....கந்தசுவாமி.......‌

Sunday, November 13, 2011

விடுப்பவன் எவன்?


ற்களும் கடல்களும்,
புற்களும் பூகம்பமும்,
புதிர்தான் எல்லாம்,
புவியின் மேலே.
அவிழ்ப்பவன் மனிதன்.
விடுப்பவன் எவன்?
சலிக்காமல் முளைக்கும்,
சந்திரனும் சூரியனும்,
ஆக்கவும் தாக்கவும்,
நீரும் நெருப்பும்,
நுரையீரல் நுழைந்து,
உயிர்தரும் காற்றும்,
சரிவிகிதக் கலப்பில்,
சரியும் தவறும்,
விரிவாக ஆராய்ந்து,
விடைவினான் மனிதன்.
விடுத்தவன் எவன்?
அணுவும் அதன்பிரிவும்,
அகிலத்தின் அளவும்,
முகிலுள்ளே இசையும்,
முழுவுடல் தசையும்,
விண்வெளி கோளும்,
மின்னொளி கோபுரம்,
வியாதிகள் விரட்டும்,
வியத்தகு மருந்தும்,
விரிவாக ஆராய்ந்து,
விடைவினான் மனிதன்.
விடுத்தவன் எவன்?
வேறுபடும் கருத்தால்,
மாறுபடும் அறுதியிடல்,
அளிக்கிறது உலகம்.
இறைவனென ஆத்திகன்,
இயற்கையென நாத்திகன்.
.....கந்தசுவாமி.....

Sunday, November 6, 2011

இப்படியும் சிலர் வாழ்க்கை


வாகன ஒலியே வானொலி.
வானத்து நிலவே காதலி.
தெருக் குழாய் கங்கை.
தென்றலே பட்டுப் போர்வை.
சொத்துகள் எதுவும் இல்லை.
சொந்தங்கள் எங்கும் இல்லை.
காலனை விரைவில் எதிர்பார்த்து,
காலம் காலமாய் காத்திருந்து,
இருக்கும் ஒரு வாழ்க்கை...
இப்படியும் சிலர் வாழ்க்கை..
.........கந்தசுவாமி..........

Tuesday, October 18, 2011

உள்ளத்தில் தீ மூட்டு


விழுந்திடும் அருவிகள் அழுவதில்லை.
தொடர்ந்திடும் நதியென கடலைத்தேடி.
நேரம் என்ன காலம் என்ன‌
உழைக்கும் வேளையில்.
தூரம் என்ன தூக்கம் என்ன‌
கனவின் பாதையில்.
வெள்ளைத் தாள் தான் வானம் அதிலே
வண்ணம் தீட்டுவோம்.
உள்ளம் எங்கும் உண்மை என்னும்
தீயை மூட்டுவோம்.
விதியின் சதிகள் மதியால் வெல்வோமே.
வினை யாவிலும் துணை
துணிவென்ற ஒன்றாமே.
சிரமம் அது சிறை இல்லை,
சிகரம் தொட படி தானே.
கவலை மறந்து,
கதவு திறந்து வா.
குறைகள் ஊர் நூறு சொல்லும்.
மறைவாய் போர் செய்து கொல்லும்.
நிறைகள் நீ கண்டு கொண்டால்,
நிறைவாய் நம் பேரைச் சொல்லும்.
முயன்றால் முடியும்,
முழுதாய் விடியும் இரவும்.
தடைகள் உடையும்,
தலையும் நடையும் நிமிரும்.
.....கந்தசுவாமி..........

Monday, September 19, 2011

தனிமையில் வாடும் தலைவன்.

இலையுதிர் காலம்.
இளவெயில் நேரம்.
இருவிழி ஓரம்,
சிறுதுளி ஊரும்.

பழகிய காலம்.
அழகிய காலம்.
நினைவுகள் தீண்டும்.
மறுபடி வேண்டும்.



சிரித்து சிரித்து சிறகுகள் விரித்தோம்.
விரித்து விரித்து வெற்றிகள் பறித்தோம்.
கிண்டலும் கேலியும்,
கிண்டிடும் ஞாபகம்.
எண்ணங்கள் யாவையும்,
நண்பனின் பூமுகம்.

கண்களில் அதிகம் பேசிக் கொண்டோம்.
கனவினில் கரங்கள் கோர்த்துக் கொண்டோம்.
எனக்கென இருக்கிறாய்,
மனதினில் வசிக்கிறாய்.
திரைகளும் திறந்திடும்,
விரைவினில் விடிந்திடும்.
.......கந்தசுவாமி..........

Thursday, September 1, 2011

மின்னல்


கண்கள் கொஞ்சம் கூசும்,
விண்ணில் வெளிச்சம் பூசும்.
விஞ்ஞான உலகம் எல்லாம்,
வியந்தே தினம் புலம்பும்.
கேள்விகள் பல எழும்பும்,,
கேவும் மூளை குழம்பும்.
அழகான கிறுக்கல் சித்திரம்,
அதில்தான் வகைகள் எத்தனை.
வானுக்கும் பூமிக்கும் பாலமாய்,
வானத்தின் மேகத்தில் தூதனாய்,
ஆலமர விழுதுபோல் இணைந்தும்,
ஆகாயப் பந்துபோல் தெரிந்தும்,
வித்தைகள் காட்டும் தந்திரன்.
மின்னேற்றம் கொண்ட மந்திரன்.
தூரத்தில் கவனங்கள் ஈர்ப்பவன்..
தூறிடும் மழையின்கை கோர்ப்பவன்.
இடிக்கும் முகில்களின் இடையே,
இடியின் மூத்தவனாய் பிறப்பவன்,
மூடுவான் மூத்தவர் பார்வையென்று,
மூடத்தனம் ஒன்றும் இங்குண்டு.
அழிவும் ஆக்கமும் கொண்டவன்.
அனுபவம் அதிகமே கண்டவன்.
இயற்கையோ இறைவனோ எதுவென்று தெரியவில்லை.
இன்றுவரை முழுதாக யாருக்கும் புரியவில்லை.
.........
கந்தசுவாமி........

Saturday, August 6, 2011

தாய்ப்பால்


மருத்துவம் அதன் மகிமையை சொல்கிறது.
கருத்துகள் அதை ஆதரித்து செல்கிறது.
உயிருக்குள் உயிர் வளர்த்து காப்பவள்,
உணவினை அவ்வுயிர்க்கு உறுதியாய் தரட்டும்.
பயன்கள் அளிக்கும் பரஸ்பரம்.
பயிர்க்கு அன்னை பராபரம்.
தாய்மையின் கடமை.
சேய்க‌ளின் உட‌மை.
மறுப்பதும் வெறுப்பதும்,
மனிதனாய் இருப்பதும்,
ஈதவள் விருப்பு.
ஈடிலா பொறுப்பு.
.......கந்தசுவாமி........

Wednesday, August 3, 2011

ந‌ன்மைக‌ள்

துரத்திடுவோம் கனவுகளை...
துயில்மறந்த கண்களால்...
தொடர்ந்திடும் நம்மையே,
தொகையாய் ந‌ன்மைக‌ள்...
....க‌ந்த‌சுவாமி.....

Saturday, July 23, 2011

புனைகவி

புனைகுழல் புனைந்துரைக்கும் புனையினால்,
புனைதனை புனைவிட்டாய் எனக்கு.
சுனையால் புனைவிய கொடிமலரில்,
புனையல் புணர்வேன் உனக்கு.
..........கந்தசுவாமி......

வியக்கிறேன்

வேற்றுக் கிரகத்தில் மனிதர்களா?
நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிகள்.
சோற்றுக்கே வழியில்லை பலருக்கும்.
சோதனைக்கு கோடிகள் செலவு.
மனிதனின் அறிவினை வியக்கிறேன்!!!
..........கந்தசுவாமி.........

Tuesday, July 12, 2011

தேவதை


இயந்திரச் சத்தம்,
இனிய இசையாகிறது....
வாகனப் புகை,
வாசனைத் தென்றலாகிறது...
சாலையில் அவளைச் செல்ல வைத்தே,
ஓசோன் ஓட்டையினை அடைத்திடலாமோ!!
.............கந்தசுவாமி...........

Tuesday, July 5, 2011

எண்களில் காதல்


ஒரு நாள் அவளைக் கண்டேன்.
இரு இதயம் கலக்கக் கண்டேன்.
மூன்று காலம் மறந்து நின்றேன்,
நான்கு திசைகள் தொலைத்து நின்றேன்.
ஐம்புலன்கள் திறந்து கொண்டன.
ஆறரிவும் பறந்து சென்றன.
ஏழேழு ஜென்மங்கள் இணைந்திருந்து,
எட்டைப் போல் பிணைந்திருந்து,
ஒன்பது கிரகங்கள் தாவி விளையாடினாலும்,
பத்தாது கண்ணே என் காதலைச் சொல்லிட!!!!!!!!!!!!!
.............கந்தசுவாமி..................

Monday, July 4, 2011

ம(பு)னிதம்


உதிரும் உயிர்கள் பலவும்,
உதிரம் இருந்தால் நிலவும்.
குருதியின் மகத்துவம்,
கருதியே அளிப்போம்.
மனிதம் மதித்துப் போற்றினால்,
மரணமும் விலகிப்போய் கைத்தட்டும்.
.........கந்தசுவாமி..............

Sunday, July 3, 2011

நட்புக்காலம்

'நட்புக்காலம்' என்னும் தலைப்பில் நான் இங்கு படைத்திருப்பது,
நினைவுகளின் தொகுப்பு.
நாம் வாழ்ந்த,வாழ்கின்ற அற்புத நாட்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்.
ஒரு வரியேனும் உங்கள் நண்பர்களை நினைவூட்டும் என்ற நம்பிக்கையுடன்.

நட்புக்காலம்

'அ' வைக் கரம் எழுதிய நிமிடம்,
அவை அகரம் ஆனது நட்பிற்கு.
கூட்டல் கழித்தல் நாமறிந்த போது,
கூடினோம் ஒன்றாய்க் கழித்தல் ஏது!
வகுத்தல் பெருக்கல் அறிந்து கொண்டோம்.
வகுக்கும் குணமில்லை பெருகிவிட்டோம்.
இயற்பியல் வேதியல் நினைவில் வைத்தோம்.
இயல்பாய் நேசம் இதயம் வைத்தோம்.
பள்ளி முடித்துத் துள்ளி ஆட்டம்.
உள்ளம் கொள்ளப் புதிய கூட்டம்.
உடலில் செயலில் சிறிய மாற்றம்,
விடலைக் கூட்டம் எங்கள் தோற்றம்.
சாயும் காலம் தேனீர் அருந்தி,
சாலைக் கடையில் சாப்பிடப் பொருந்தி,
இரவில் தெருவில் உலா வருவோம்,
இரவல் வண்டியில் இன்பம் பெருவோம்.
அளவில்லா அரட்டை அடித்துச் சிரித்தோம்,
இளமைச் சிரமங்கள் நட்பினில் எரித்தோம்.
முதல் நாள் எந்திரன் படம்.
முட்டி மோதிப் பிடித்தோம் இடம்.
சாமம் விழித்துப் படங்கள் பார்த்தோம்,
காலை வகுப்பைத் தூங்கித் தீர்த்தோம்.
சேர்ந்து படித்தோம் தேர்வு சமயம்.
சேர்ந்தே இருந்தால் சிறிதே இமயம்.
வானவில் ரசித்தோம் மழையில் நனைந்து.
வாழ்க்கை ரசித்தோம் நட்பினில் நனைந்து.
முக்காலமும் இனிமை நட்புக்காலம்.
அஃதின்றி வாழ்க்கை உப்புக்காலம்.
இணைந்திருப்போம் நண்பா.
என்றெறென்றும் அன்பாய்...
..........கந்தசுவாமி........

Saturday, July 2, 2011

விள‌ம்பரம்


மழை கூட விள‌ம்பரம் செய்கின்றது
மின்னல் விளக்காலும்,
இடியின் இசையாலும்.
........கந்தசுவாமி..........

Sunday, June 26, 2011

குழந்தைத் தொழிலாள‌ர்

குழந்தைத் தொழிலாள‌ர் வருமானம்,
பெற்றோருக்குப் பெருத்த அவமானம்...
அழகான வரிகளை எழுதிக் கொண்டிருந்தான்,
அழுக்கான உடையில் ஒருவன்...
விளம்பரப் பலகை எழுதிடும்,
விடியாத இரவுடைய‌ சிறுவன்...
........கந்தசுவாமி...........

திருக்குறள்

மதித்துப் போற்ற வேண்டிய குறள்,
மதிப்பெண் கருவியாய் மட்டும் உள்ளது.
வருந்தாதீர் வள்ளுவரே...
வருகிறது மாற்றம்...
....கந்தசுவாமி.....

Saturday, June 18, 2011

சாக்கடை குழாய்

சிமெண்ட் குழந்தைகளுள் நான் பாவம்.
சாக்கடை குழாயாய் எனக்கு சாபம்.
புதைபடும் நாளினை எண்ணிணேன்.
இதையென் விதியென்று விம்மிணேன்.
அரசால் விமோசனம் வந்தது.
திட்ட‌ம் பாதியில் நின்றது.
ப‌த‌வி உய‌ர்வும் பெற்று விட்டேன்!
க‌த‌வுக‌ள் ம‌ட்டுமே குறை.
ம‌ற்ற‌ப‌டி நானும் வீடு தான் இன்று!
.............க‌ந்த‌சுவாமி.........

தமிழ் வாழ்க‌


வழும் நீராய் தகிக்கும் நெருப்பாய்,

நிமிரும் வானாய், நிலமாய் காற்றாய்,

அமிழ்தாய் அழகாய், நிறைவாய் தெளிவாய்,


வாய்மை பண்பில், தூய்மை அன்பில்,

வாழ்கை எல்லாம் வண்ணம் தெளிக்க,

வருதமிழே..!! தருக வளமே..!!
.........கந்தசுவாமி...........

Monday, March 28, 2011

கூட்டணி ஆட்சி


உடலின் உறுப்புகளுக்குள் தேர்தல்.
கைகளின் பிரச்சாரம்,
எடுப்பதும் கொடுப்பதுமாய் இருக்க,
கால்களின் பிரச்சாரம்,
நடப்பதும் சுமப்பதுமாய் இருந்தது.
கண்டதை முன் வைத்து,
கண்களின் அறிக்கை.
சொன்னதை சொல்லிற்று,
வாய் அதன் உரையில்.
முகர்ந்ததை,முரைத்ததை,
மூக்கது முன் வைத்தது.
கேட்டதை வைத்தது,
காதுகள் வாக்கு கேட்டன.
மக்கள் போல் குழம்பிய மனம்,
கூட்டணி ஆட்சி கொண்டு வந்தது.
........கந்தசுவாமி.......

Wednesday, March 23, 2011

கடவுளைக் காணும் வழி


தனியாய் இருக்கும்,
பொதுவான கடவுளைக் காண,
தனி வழி,
பொது வழி ஏனோ?
......கந்தசுவாமி............

Tuesday, March 22, 2011

கவிதை

காயங்கள் ஆற்றும் கவிதை.
மாயங்கள் செய்யும் கவிதை.
இன்பம் தெளிக்கும் கவிதை.
இண‌க்கம் அளிக்கும் கவிதை.
கனவில் நிஜமே கவிதை.
கார்முகில் வானம் கவிதை.
காதல் மொழியும் கவிதை.
கதறல் வலியும் கவிதை.
என்றும் இனிக்கும் கவிதை.
எனக்குள் எரியும் கவிதை.
.......கந்தசுவாமி........