Saturday, February 25, 2012

நம்பிக்கை


நடுத்தர வர்க்கத்தின் தினசரித் தோழனான‌ மின்சார இரயில் நிலையம். அவன் கால்கள் தினம் தழுவும் அந்த நடைமேம்பாலத்தின் படிகளில்,பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் மெழுகுவர்த்தி விற்றுக்கொண்டிருப்பார்.

சிலமுறை இவன் இரயில் வரும் வரை பாலத்தின் மேலேயே நிற்பான்.அவர் செயல்களை உற்று நோக்குவான்.அவர் காலையிலும் மாலையிலும் கூவும் முறை வேறுபடும்.அவர் நெரிசல் நேரத்தில் அதிகம் கூவுகிறார் என்று சொல்ல முடியாது.அவருக்கென்று ஒரு தனி முறை கடைபிடித்தார்.விந்தை இவனை உந்த,அவரிடமே கேட்டுவிட்டான்.

அதற்கு அவர், 'பார்வை இல்லாத நான் காலடி சத்தங்கள் வைத்து கூவுவேன்.காலையில் நெரிசல் இருந்தாலும், வேலைக்கு செல்லும் அவசரத்தில்,என்னை பலர் கவனிக்கமாட்டார்.அதனால் மாலையில் அதிகம் கூவுகிறேன்.என் அனுபவ அறிவும்,செவியால் வருகை அறியும் திறனும் எனக்கு துணை புரிகின்றன்' என்றார்.'

அவ்வாறெனில்,மாலையில் மட்டும் விற்கலாமே' என்றான் அவன்.

'அடிக்கடி மின் தடை ஏற்படும் இந்நாளில்,காலையில் ஒரு சிலரேனும் வாங்குவர் என்ற நம்பிக்கையில் விற்கிறேன்.'

'உங்க கிட்ட திருட மாட்டாங்கனு என்ன நிச்சயம்' அவன் கேட்க,

'நம்பிக்கை தான் தம்பி.நம்பிக்கை இல்லைனா கண்ணு இருந்தாலும் யாராலயும் வாழ முடியாது' என்றவர் முடிக்க,

இரயில் வரும் சத்தம் கேட்டது.

'மனிதனின் உயிரிருக்கும் மந்திரப்பெட்டி நம்பிக்கை'.....

எங்கோ ஒரு நூலில் படித்த வாசகத்தை அசைபோட்டபடி இரயில் பிடிக்க ஓடினான்.

....................கந்தசுவாமி...............

பொய் வாழ்வு


சலனங்கள் சங்கடத்தில் எழும்பி,
கலங்கிடும் மனங்களும் குழம்பி.
கசக்கிப் பிழியும் கவலைகள்.
பசப்பிப் போகும் மனிதர்கள்.
கசக்கிக் கண்கள் திறப்பதற்குள்,
களவாடிப் போகும் கூட்டங்கள்.
உணர்வுகள் இடையே சிக்கி,
உறவுகள் இடையே சிக்கல்.
வெற்றியின் பின்னால் ஓடியே,
வெற்றாகக் கழியும் நினைவுகள்.
இரசிக்க மறந்த அறிவு.
இரக்கம் இழந்த இதயம்.
பயணம் முழுதும் பயமருந்தி,
பயனிலா வழிகளில் பழகப்பொருந்தி,
பொய்யான வாழ்வினை வாழ்கிறோம்.
மெய்யான இன்பங்கள் தொலைத்துவிட்டு.
...........கந்தசுவாமி......

Saturday, February 18, 2012

காகிதம்


பணமென்ற பதவி அட்டைகளால் அழிய‌
புத்தகப் புகழ்களும் மின்பதிவில் புதைய,
செய்தித்தாளும் தொலைக் காட்சியில் தொலைய,
குறிப்புக் கோப்புகளோ கணினியால் காணவில்லை.
காதல் கடிதங்கள் அலைபேசியில் அடங்கிடவே,
காலம் காலமாய் கோலோச்சிய காகிதம்,
பத்திரத்தில் மட்டும்தான் பத்திரமாய் உள்ளதோ இன்று?
......கந்தசுவாமி...............

Thursday, February 9, 2012

மண்வாசனை


தனக்காகத் தன்மேலே,
தன்னலமாய்ச் சண்டையிட்டு,
தன்மீதே மாண்டுவிழுந்து,
தன்னுள்ளே மறைந்துபோகும்,
தன்னமான மனிதனைக்கண்டு,
தன்மடியில் ஏந்திக்கொண்டு,
தலைகணம் தற்பெருமையின்றி,
புன்னகை புரிகிறது மண்பூமி.
மண்வாசனை.
.......கந்தசுவாமி........

Saturday, February 4, 2012

கடவுள்


புதிர்களின் புகலிடம்.
உயிர்களின் உறைவிடம்.
யுகங்கள் கடந்து,
யுத்தங்கள் கடந்து,
ஆத்திகனால் வழிபட்டு,
நாத்திகனால் பழிபட்டு,
இருவரையும் குழம்பச்செய்து,
மனக்குட்டை கலங்கச்செய்து,
தெளிவாய்த் தெரியாத,
ஒளியின் நிழல்தான்.
கற்பனையின் கண்களிலே,
கடவுளைக் காணலாம்.
உருவமாய் அருவமாய்,
உள்ளலாய் அன்பாய்,
விதவிதமாகக் காணலாம்.
கண்கள் அனைவர்க்கும் வேறே.
கற்பனையும் தான்.
.........கந்தசுவாமி........

Friday, February 3, 2012

நட்பின்றி வேறேதுமில்லை


பருவங்கள் ஒவ்வொன்றிலும்,
விருப்பங்கள் வித்தியாசப்படும்.
குழந்தையில் பிடித்தது,
இளமையில் வெறுக்கும்.
இளமையில் இரசித்தது,
முதுமையில் சலிக்கும்.
முதுக்குறை வுள்ளவனும்,
முட்டாளாய் இருப்பவனும்,
வல‌வனும் வறியவனும்,
அவனுக்கும் எவனுக்கும்,
கருவறை விட்டநாள் முதல்,
கல்லறை தொட்டிடும் வரை,
என்றும் எப்போதும்,
என்பில் உயிரில்,
எஞ்சாமை அளிப்பது,
நட்பின்றி வேறேதுமில்லை.
.......கந்தசுவாமி..........

Thursday, February 2, 2012

மாறிய மாரி


மேகத்தில் இடமில்லை.

மண்ணோக்கி விழுகிறது,

விண்ணோக்கி ஆவியான,

உயிர்திறக்கும் சாவிகள்.

விழுகையில் அவையும்,

முழுவதாய் தீர்த்துதான்,

முகில்களை காலிசெய்யும்.

முறுவலுடன் கேலிசெய்யும்.

காலங்கள் பார்த்து,

கார்முகில் வேர்த்தவன்,

நேரெதிர் நேரத்தில்,

நேற்றுதான் பெய்கிறான்.

தோழர்களாம் மரங்களின்,

தோகம்தரும் மரணங்கள்,

பழிவாங்கப் பார்த்துதான்,

குழிதோண்டிப் போகிறது.

மனிதன் பருகியதால்-அவன்

குணங்கள் பழகியதால்,

மாரியும் மாறித்தான்,

கோபத்தைத் தூறிடுதோ???

.......கந்தசுவாமி,,,,,,,,,