Tuesday, March 27, 2012

பேச விடுங்களேன்



கௌதம் வழக்கமாக 5 மணிக்கு கூடைப்பந்து பயிற்சி முடித்து வருவான்.

இன்று வியர்வை துடைத்து,முகம் கழுவுகையில்,சிறிய முள்ளும் பெரிய முள்ளும் சேர்ந்து கடிகாரத்தை சரிபாதியாகப் பிளந்திருந்தது.

ஒரு மணி நேரம் தாமதம்.

அவசர அவசரமாய் கைப்பேசி எடுத்து பார்த்தான்.5 தவறவிட்ட அழைப்புகள்.
உடைமாற்றிவிட்டு மறுபடி அழைக்கலாம் என்று எண்ணிய வேளையில்,
"அழைப்பாயா அழைப்பாயா"
அவன் அழைக்க விழையும் திவ்யா அழைத்தாள்.

தொடுதிரையில் அவன் கைவிரல் அலையாய் கடக்க,
தொடங்கியது அவளின் கோப அலைகள்.

'எத்தனை வாட்டி call பண்றது?ஏன் எடுக்கவே இல்ல?'

'அது வந்து....'

'பேசாத.அவ்ளோதான் இல்ல.என்ன நீ கண்டுக்குரதே இல்ல வர வர.ரொம்ப மாறிட்ட கௌதம் நீ.

‘இல்ல திவ்யா அது ……’

‘என் மேல வெச்சிருந்த லவ் குறைஞ்சுடுச்சு.நான் உனக்கு இம்சை மாதிரி தெரிய ஆரமிச்சுட்டன்ல. சே.இனி உனக்கு call பண்ணவே மாட்டன்.bye'

'திவ்யா திவ்யா...'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மறுபடி அழைக்க முயற்சி செய்தான்.தொடர்பு கொண்ட எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

நூறு ரூபாய் அபராதம் தவிர்க்க,
கடனே என தலைக்கவசம் மாட்டி வண்டியைக் கிளப்ப,

"ஏ ஜிம்பா ஜிஜக்கு ஜிம்பா"
டி.ஆரின் ஆப்பிரிக்க பாடல் ஆர்பரிக்கத் தொடங்கியது அவன் அலைபேசி.

'மச்சான் படத்துக்கு நேரம் ஆச்சுடா.எங்க இருக்க? சீக்கிரம் வா.வரும் போது உன் ஏடிம் கார்டு மறந்துடாதடா.நைட்டு உன் .நீ commit ஆகி 1 வருஷம் ஆச்சுல'

'இல்லடா அது வந்து....'

'மச்சான் 2 ரூபா தான் இருக்கு போன்ல.நீ தியேட்டர் வாசல் வந்துட்டு கால் பண்ணு.bye '

'டேய் டேய் டேய்.....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'உன் போன்ல என்னைக்குடா 2 ரூபாய்க்கு மேல இருந்திருக்கு',
முனங்கியவாறே புறப்பட்டான்.

திரையரங்க வாசல் நெருங்குகையில்,
"ஓட ஓட ஓட தூரம் குறையல"
'கோச்' என மிண்ணியது அலைபேசி திரை.

'கௌதம் நாளைல இருந்து தினமும் 6.30 வரை எல்லாரும் இருந்து விளையாடனும்.மத்தவங்க கிட்டயும் சொல்லிடு'

'சார்,அது வந்து,...'

'நீ தான் பொறுப்பான பையன்.மறக்காம எல்லார் கிட்டயும் சொல்லிடு.bye '

'சார் சார் சார்....'
பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'சே.இந்த போன்ல எதுக்குடா மைக் இருக்கு.எவனாச்சும் அடுத்தவன் பேசுறத காது கொடுத்து கேக்குறானா?அறிவே இல்லாம போன் பேசுறாங்க.'
தனக்குள் புலம்பியவாறு நண்பனைத்தேட,

"காலையில் தினமும் கண் விழித்தால்",அவன் அலைபேசி ஒலித்தது.

'அம்மா நான் friend கூட படத்துக்கு போறன்.நைட்டு சாப்பாடு வேண்டாம்.bye '

'டேய் கௌதம் ஒரு நிமிஷம் டா....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'நான் சொல்றத எங்கயாது கவனிக்குறானா.போன்ல பேசுற அறிவே இல்ல.சே.'

அவன் அம்மா புலம்பிக்கொண்டே,கௌதம் அப்பாவுக்கு போன் செய்தாள்.

'வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வந்துருங்க.
நாதஸ்வரம் ஆரமிக்கபோகுது.வெச்சுடறன்'

அவர் பதில் சொல்வதற்குள்,
பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

..............கந்தசுவாமி............

Saturday, March 17, 2012

மன்னிப்பு


மனிதன் இருக்கும் வரையிலும்,
மண்ணில் இதற்கு மரணமில்லை.
நொடியெல்லாம் புவிமீதே,
ஒடிந்தமனம் ஒட்டுமிது.
பெறுகையில் இனிக்கும்,
தருகையில் கசக்கும்.
கோருபவன் கோவாகிறான்.
கொடுப்பவன் இறையாகிறான்.
.............கந்தசுவாமி.......

இது நம்ம வேலையில்ல


'அந்த கார் வந்த போக்கே சரியில்ல.'

"என்ன இருந்தாலும் வண்டில வந்தவரு கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்.கார் காரணுங்க இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவாங்க."

"1995க்கு அப்புறம் இப்பத்தான் இப்படி ஒரு விபத்த நேர்ல பாக்குறன்.நாளுக்கு நாள் நாடு மோசமாயிட்டே போகுது."

ஆளுக்கு ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அடிபட்டவனைச் சுற்றி நின்று கொண்டு.

"ஒரு 30-35 வயசு இருக்கும்.தலையில நல்ல காயம்.சீக்கிரம் வாங்க."

ஒரு பெரியவர் தன் செல்பேசியில்,108 தொடர்பாளரின் உறக்கம் கலைத்து,உரக்க பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு பழைய மாருதி கார்,அடிபட்டுக் கிடந்தவரை விட அதிகம் சத்தம் போட்டுக்கொண்டு வந்தது.அதிலிருந்து இருவர் இறங்கினர்.

"நான் பக்கத்து ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.என்ன ஆச்சு" அட்டையை நீட்டியபடி வினவினார்.

உடனே அனைவரும் சற்று பின்வாங்க,அனைவரின் முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர்,நடந்ததைச் சொன்னார்.

"ஒரு கார் காரன் காட்டான் மாதிரி வந்தான் சார்.இவரு ஒழுங்காதான் வந்தாரு.இடிச்சிட்டு நிக்காம போயிட்டான் பாவி.பத்து நிமிஷம் இருக்கும் நடந்து"

"அந்த கார் நம்பர் குறிச்சீங்களா?"

"அது வந்த வேகத்துல எங்க சார் நம்பர் எல்லாம் பாக்க."

"சரி.கார் எப்படி இருந்துது பாக்கறதுக்கு?"

"கறுப்பு வண்டி சார்.நல்ல மலமாடு மாரி பெருசா இருந்துச்சு." கடைக்காரர் முடிக்க,

"தண்ணி போட்டுட்டு ஓட்டிட்டு வந்தான்னு நெனைக்குறன்.தாருமாரா வந்தான்"

தன் விசாரணை அறிக்கை அளித்தான் ஒரு மேதாவி.

"ஹைவேயில வண்டி ஓட்டும்போது இவரு தான் சார் பத்திரமா வரணும்"

போன் பெரியவர் சொன்னார்.

"கொஞ்ச நேரம் சும்மா இருங்கய்யா".இது கான்ஸ்டபிள்.

108 தன் ஒலியை எழுப்பியவாறே அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த நாய்களையும் பறவைகளையும் எழுப்பிவிட்டு வந்தது.

காயமடைந்தவர் அவசரமாய் அவசர ஊர்தியில் ஏற்றப்பட,சைரன் ஒலி மீண்டும் எழும்பியது.

அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.

...................................

"யோவ் உனக்கு என்ன சர்க்கரை வியாதியா?பத்து நிமிஷத்துக்கு ஒருதடவ வண்டிய ஓரங்கட்ட சொல்ற".கான்ஸ்டபிளைக் கடிந்த அதிகாரியிடம்,

"ரொம்ப தண்ணி குடிச்சிட்டன் சார்.அதான்."

"வாய்யா சீக்கிரம்"அவர் கத்த,

"சார் அந்த கறுப்பு ஹம்மர் கார்ல ஹைவேஸ் ஓரத்துல நிறுத்தி தண்ணி அடிக்குறாங்க சார்."

பதிலுடன் சேர்த்து பத்தடி தூரத்தில் நடக்கும் கேடையும் சொன்னார் கான்ஸ்.

"விடுய்யா.நாம இப்போ டூடில இல்ல.அப்படியே போய் கேட்டாலும் அமைச்சர்,அது,இதுனு பேசுவாங்க.சீக்கிரம் ஊர் போய் சேரணும்.கண்டுகாம வா போவோம்.இது நம்ம வேலையில்ல."

20 நிமிடங்களுக்கு முன் நடந்தது அதிகாரி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.

....................கந்தசுவாமி.............

Sunday, March 11, 2012

பிறந்தநாள்


என் அம்மா அப்பா இல்லைனா நான் இல்லை.
நான் கேட்காமலேயே என் தேவைகள் பூர்த்தி செய்து,
என்னோட எல்லா நிலையிலயும் எனக்கு பக்கபலமா,
என்னை நம்பி என் வாழ்க்கையோட முடிவுகள,
என் கிட்டயே கொடுத்து,
அதே சமயம் நான் சரியான முடிவு எடுக்குற மாதிரி
என்ன பொறுப்பா வளர்த்து,
அவங்கள பத்தி ஒரு பத்தி எழுதுற அளவுக்கு,
எனக்கு பக்குவம் கொடுத்திருக்காங்க.
பெருமையா இருக்கு.
அவங்களும் என்ன நெனச்சு ஒருநாள் பெருமை படுவாங்க.
அந்த நாள் தான் நான் ஒரு முழு மனிதனா பிறக்குற நாள்.
இத நான் facebook la போடாம என் வளைதளத்துல போடுறன்.
ஏன்னா இதுக்கு likes and comments வாங்குறது என் நோக்கம் இல்ல.
என் அப்பா அம்மா பத்தி பகிர்ந்துக்கணும்.
அவ்ளோதான்.
.......கந்தசுவாமி..........

Saturday, March 10, 2012

எழுத்தாளன்

இழப்புகள் இழிவுகள் குவிகையில்

இதழ்கள் விரிக்கச் சொல்கிறான்..

கவலை வலையில் கசங்கினாலும்

சிணுங்காமல் சிரிக்கச் சொல்கிறான்..

புக்தியில் புந்தியும் புண்படுகையில்

புன்னகை பூக்கச் சொல்கிறான்..

தனிமை துவட்டித் துவைத்தாலும்,

தளராமல் தகர்க்கச் சொல்கிறான்..

தன்னாட்கள் பிறருக்காக வாழ்வதில்,

தன்னிறைவு கொள்ளச் சொல்கிறான்.

பிறர் அவனைப் பித்தனாய் சித்தரிக்க,

அவன் பிறரை மனிதனாக்க முயல்கிறான்.

..........கந்தசுவாமி.....

Saturday, March 3, 2012

சாதி(தீ)


தொழில் கொண்டு உருவாகி,
நிறமென்று நிறம்மாறி,
பிறப்பால் பிரிக்கப்பட்டு,
பிணமெனும் தகுதியை,
இறக்கும் முன்னே மனிதற்கு,
இறக்குமதி செய்கிறது.
சாதி(தீ) என்னும் வியாதி...
.......கந்தசுவாமி........