Wednesday, December 21, 2011

புதுக் கவிதை


புதுக் கவிதைகளின்,
புலன்கள் யாவும்,
பழைய காதலினால் மட்டும்,
புதுப்பிக்கப்படுகின்றன.
காதலும் தோல்வியும் தவிர,
பாடுபொருள் இல்லையோ?
இருந்தாலும் இளங்கவிகள்,
நாடுவது இல்லையோ?
....கந்தசுவாமி......

Friday, December 16, 2011

அன்னை


இலைமேல் மழையின் துளிபோல்,
மேனிமேல் வியர்வை ஒழுகும்.
உலையின் அடுப்புச் சூட்டில்,
உடலும் கொஞ்சம் கொதிக்கும்.
வெட்டிய காய்கறிகள் வேகும்.
வலியில் விரலும் நோகும்.
பானை நிறைய வடித்தவள்,
பருக்கை பொறுக்கி உண்பாள்.
நம் வயிறு நிறைவதில்,
அவள் மனம் நிறையும்.
அவள் தான் அன்னை.
....கந்தசுவாமி.......

Thursday, December 15, 2011

ஊருக்குப் போயிருக்கிறாள்


ஊருக்கு சென்ற காதலியின் நினைவில் ஒருவன் எழுதுவதாய் ஒரு கற்பனைக் கவிதை

உன்னிடம் பேசாத இரவெல்லாம்,
உறக்கம் பூசாமல் விழியிருக்க,
மூளை சூடாகி மூடிடுதே,
மூச்சு நீயின்றி கேவிடுதே.
சிரிப்பொலியும் சிணுங்கலும்,
சில்மிஷமாய் சண்டையும்,
சப்தமில்லாமல் நிறைத்தது தினமும் நெஞ்சினை.
தனிமையில் உந்தன் நினைவுகள் பஞ்சனை.
இருப்பினும் இருக்குதே உறக்கத்தின் வஞ்சனை,
இருகரம் இணைத்தெனை விரைவினில் வந்தனை.
நீ தொலைவில் இருக்கும் வேளையிலே,
என் தொலைபேசி அலுக்கும் வேலையிலே.
சிரிப்பை சிலநாள் காணவில்லே,
சீக்கிரம் வந்திடு வானவில்லே.
......கந்தசுவாமி.....

Thursday, December 8, 2011

ஹைக்கூ சாரல்

காதலில் தோற்ற பெண்கள் மதுக்கடை செல்லவில்லை.
தாடியும் வைத்து தாஜ்மகால் கட்டவில்லை தெருவில் தறிகெட்டுத் திரியவில்லை.
ஏனெனில் அதற்குக்கூட உரிமையில்லை அவர்களுக்கு அந்நாளில்.
......கந்தசுவாமி.........

கண்டேன் அறிவிப்பொன்று காதலைக் காணவில்லை என்று.
கண்டுபிடிக்கத் தேடினேன் பெண்களிடம் ஆண்களிடம் பெற்றோரிடம் அவர்தம் பிள்ளையிடம்
பணம்தேடும் அவசர வாழ்க்கையில் கேட்பாரற்றுப் புதைந்திருக்கிறது.
......கந்தசுவாமி........

முட்களை முன்னுரையில் வாசிக்கும் முரட்டுத்தனமாய் உலகமிது.
முரண்பாடு சொல்வார் இவர்கள் முறையாக மண்மேல் எவனொருவன் வாழ்ந்தாலும்.
நன்மைகளை நகைக்கும் உண்மைகளை உதைக்கும் இக்கூட்டம்.
.......கந்தசுவாமி.......

Saturday, December 3, 2011

என்நாள் வந்திடும் என்னால்.


கறைகளில் நனைந்து,
சிறைகளில் அடைந்து,
சிதைந்த மனமே,
சிலவரி கேள்.
தலை குனியும் தருணம் எல்லாம்,
தரை உணரும் தவமென கொள்வாய்.
தடுமாறி நிலை குலைந்தாலும்,
தடம்மாறி நிலை இழக்காதே.
ஊரைச் சுற்றும் சக்கரம் எல்லாம்,
சேரைத் தூற்றி என்மேல் அடிக்கும்.
சேர்ந்து இருக்கும் சிலரும் தொடுப்பர்,
சிரிப்புப் பேச்சில் நஞ்சின் அம்புகள்.
சிரித்துக் கொண்டு செல்வேன் நானும்,
சிவந்த விழியும் மனமும் வலிக்கும்.
நேற்றின் கனவுகள் தோற்றுப் போகலாம்,
ஊற்றும் ஆசைகள் உறைந்து போகலாம்.
காற்றில் கரைய நான் பாஸ்பரம் இல்லை,
தோற்றுப் போயினும் தொய்வதே இல்லை.
அறைதனில் அடைந்திட மாட்டேன்.
மூலையில் முடங்கிட மாட்டேன்.
எந்நாள் வருமோ என்நாள்?
அந்நாள் வந்திடும் என்னால்.
.....கந்தசுவாமி.......‌