Saturday, December 3, 2011

என்நாள் வந்திடும் என்னால்.


கறைகளில் நனைந்து,
சிறைகளில் அடைந்து,
சிதைந்த மனமே,
சிலவரி கேள்.
தலை குனியும் தருணம் எல்லாம்,
தரை உணரும் தவமென கொள்வாய்.
தடுமாறி நிலை குலைந்தாலும்,
தடம்மாறி நிலை இழக்காதே.
ஊரைச் சுற்றும் சக்கரம் எல்லாம்,
சேரைத் தூற்றி என்மேல் அடிக்கும்.
சேர்ந்து இருக்கும் சிலரும் தொடுப்பர்,
சிரிப்புப் பேச்சில் நஞ்சின் அம்புகள்.
சிரித்துக் கொண்டு செல்வேன் நானும்,
சிவந்த விழியும் மனமும் வலிக்கும்.
நேற்றின் கனவுகள் தோற்றுப் போகலாம்,
ஊற்றும் ஆசைகள் உறைந்து போகலாம்.
காற்றில் கரைய நான் பாஸ்பரம் இல்லை,
தோற்றுப் போயினும் தொய்வதே இல்லை.
அறைதனில் அடைந்திட மாட்டேன்.
மூலையில் முடங்கிட மாட்டேன்.
எந்நாள் வருமோ என்நாள்?
அந்நாள் வந்திடும் என்னால்.
.....கந்தசுவாமி.......‌

No comments:

Post a Comment