Monday, December 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

உள்ளமெலாம் முயற்சி விதைத்து,

கள்ளமில்லா எண்ணம் வளர்த்து,

உழைப்பின் கரங்கள் பிடித்து,

கனவுகளின் சிறகுகள் விரித்து,

வருடம் முழுதும் நடப்போம்.

வந்திடும் நாளெலாம் சிறப்போம்.

....கந்தசுவாமி...

2013 இனிதே மலரட்டும்.புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

Tuesday, December 18, 2012

புன்னகை



மனித நிலைக்குச் சான்று...
மன அமைதிக்கு வித்து...
மறந்தால் மிருக நிலை,
துறந்தால் துறவு நிலை...
அன்றிருந்து இன்று வரை,
அரிதாகிறது சிறிது சிறிதாய்..
பரிதாபமாய் பரினாம வளர்ச்சியில்,
 பறிபோகாமல் பார்த்துக் கொள்வோம்..
..........கந்தசுவாமி.........

Tuesday, October 2, 2012

அகிம்சை


"நம்ம ஒன்னும் காந்தி இல்ல நாட்டைத் திருத்த"

திரைப்பட வசனம் போல் தொணித்தாலும் உண்மையில் பலர் மனதிலும்,சிலர் உதடுகளிலும் வாழும் சொற்றொடர் இது.

காந்தியும் அகிம்சையும் பிரிக்க முடியாத தம்பதி.
இன்று தான் அகிம்சை என்னும் சொல் நாட்டில் அதிகம் ஒலிக்கிறது.

துருபிடித்துப்போன அதனை,வருடத்திற்குச் சிலமுறை மட்டும் தூசிதட்டும்  நாளிதழ்களும்,தலைவர்களின் சொற்பொழிவுகளும்,அறிக்கைகளும் நமக்குள் பல கேள்விகள் எழுப்புகிறது.

இன்றைய தேதியில்,
அகிம்சை என்றால் என்ன?
அது எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது?
அகிம்சைவாதி என்பவன் யார்?
சராசரி மனிதனின் மனதில் அது எப்படித் தெரிகிறது?

"ஒரு பிரச்சனை வந்தால் அதில் இருந்து ஒதுங்கிவிடுவோம்.
தேவையில்லாத வேலை நமக்கேன்.
எவனும் சரியில்ல.நமக்கு மட்டும் என்ன அக்கறை.
அகிம்சையா வாழறது தான் நம்ம வேலை."

இதுவே நம்மில் பலருக்கு அற‌வழி.
இதுவும் காந்தியின் அகிம்சையும் ஒன்றா?
ஆராய்ந்து பார்த்தால்,ஆயிரம் வேறுபாடுகள்.

காலத்திற்கு ஏற்றார்போல் மாறுகிறது என்றால்,உலகின் மிக அதிவேகமான பரிணாம வளர்ச்சி கண்டது,அகிம்சையாகத்தான் இருக்கமுடியும்.

நம் சுயநலத்திற்காக ஒரு கருத்தின் அடிப்படையினை முற்றிலும் மாற்றிப் புரிந்துகொள்கிறோம்.நம் வசதிக்கு அதனை வளைக்கிறோம்.
நான்,எனது என்ற எண்ணம் அகிம்சையினை "பயந்தாங்கொள்ளித்தனம்", "பச்சோந்தித்தனம்" ஆகியவையுடன் சமன் செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால் உண்மை அகிம்சை இன்று வன்முறையாக பார்க்கப்படுகிறது.வன்முறைகள் போராட்டமெனும் போர்வையில் ஒளிந்துகொள்கிறது.

மனிதனின் ஒரு சிறந்த கொள்கையும்,மனிதனைப் போலவே மரித்திடுமோயென்று வருந்துகிறேன்,அஞ்சுகிறேன்.

அகிம்சை மீண்டும் உயிர்பெற வேண்டுமென்றால்,முதலில் அதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.

அகிம்சை என்பது,
ஒரு உணர்வு.வாழ்வின் ஒரு அங்கம்.
தனி மனிதனின் ஒழுக்கம்.
சமூகத்தின் அடையாளம்.

உரிமைக்காக போராடுவதும்,
மனஉறுதியுடன் வாழ்வதும்,
தன் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வதிலும்,
பிறர் தவறுகளை அவர் மனம் புண்படாமல் சுட்டிக்காட்டுவதிலும்,
அவர் அதனைத் திருத்த வாய்ப்பளிப்பதும்,
தன் மனத்திற்கு உண்மையானவனாய் இருப்பதும்,
எல்லோருக்கும் நன்மையே நினைப்பதும்,
இவை அனைத்துமே அகிம்சை.

உணர்ந்திடுவோம்.உணர்த்திடுவோம்.அதன்வழி நடந்திடுவோம்.

......கந்தசுவாமி..........

Saturday, July 28, 2012

அர்த்தமில்லை


காற்றைக் கிழித்திட பயந்திடும் விமானம்,

தண்ணீர் நனைக்கத் தயங்கிடும் படகும்,

நெருப்பைத் தீண்டிட மறுத்திடும் திரியும்,

நிலத்தைப் பிளந்திட மறந்திடும் விதையும்,

முயற்சி செய்யாமல் மடிந்திடும் மனிதனும்,

இருப்பதற்கு அர்த்தமும் இல்லை.

இறந்தால் வருத்தமும் இல்லை.

........கந்தசுவாமி..........

Wednesday, June 27, 2012

பறவையும் மின்விசிறியும்


பிறந்தது முதலே உயிர் இருக்கும்.
தேவைக்கேற்ப இறக்கைகள் விரிக்கும்-பறவை.
பிறந்தது முதலே இறக்கைகள் விரிந்திருக்கும்.
தேவைக்கேற்ப உயிர் வந்துபோகும்-மின்விசிறி
.........கந்தசுவாமி........

Saturday, June 16, 2012

சிலை கொடுத்த மன்னன்


உளியைப் பிடித்தே,
கற்கள் உடைத்தான்.
விரல்கள் ச‌லித்தது.
வலியால் துடித்தது.
வியர்வைப் பேரருவி,
உடலெலாம் வழிந்தும்,
கலையின் தாகம்,
தீராமல் தவித்தான்.
சிரமம் பொறுத்து,
சிற்பம் வடித்தான்.
வேடிக்கை....
சிலை கொடுத்த மன்னனை,
புத்தகங்கள் எல்லாம்,
புகழ்பாடிப் போற்றுகின்றது.
.............கந்தசுவாமி...........

Friday, April 20, 2012

ரசிகன்


20.4.1991………….

ஐந்து தையல்.

கீழ் இமைக்குக் கீழே ஒரு புருவம் முளைத்திருந்தது.

"தேவையாடா உனக்கு இது?"

"என் தலைவர் படத்த பத்தி தப்பா பேசுனா சும்மா விடுவனா.ரெண்டு போட்டன்."

"உனக்கும் நல்லா போட்டுத்தான் அனுப்பியிருக்காங்க.அடி வாங்கியும் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல‌ "

"அடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுது அந்த தியேட்டர் வாசல் ஆட்டோ ஸ்டாண்டு மொத்தமா அவன் பசங்க"

"அம்மா அப்பா இருக்கோமே.எங்களப் பத்தி அக்கறையே இல்லையா உனக்கு?"

"எங்க தலைவர் சொல்லிருக்காரு பெத்தவங்கள மதிக்கணும்.அதான் ஆட்டோ ஓட்டி உனக்கும் அப்பாவுக்கும் மாசாமாசம் 700 ரூவா குடுக்குறன்ல."

"அதுல நீயே 300 ரூபாய மன்றம்,படத்துக்குனு வாங்கிகுறியே"

"தலைவர விட உங்க ரெண்டு பேருக்கு 100 ரூவா அதிகம் செலவு பண்றன் .சந்தோஷப்படு."

"நீயும் உன் தலைவனும்.அவனா சோறு போடப்போறான்"

"யம்மா தலைவர பத்தி பேசாத.கெட்ட கோவம் வரும்."

வீட்டுக்குள் ஒலித்த குரல்கள், வீதியில் சென்ற வாத்தியார் காதில் விழுந்தது.

"அறியாமையும் சரியான படிப்பறிவும் இல்லாதது தான் இப்படி சினிமாப் பித்து பிடிச்சு திரிய‌  காரணம்".
தன் நண்பரிடம் கூறி வருந்தினார்.

"அவன் நடிக்கிறான் சம்பாதிக்கிறான்.இந்த கிறுக்குப் பயலுக மன்றம்,அது இதுனு இவங்களுக்குள்ள அடிச்சுக்குறாங்க.சே"
நண்பரின் வருத்தம்.

"இயக்குனர் சொல்றத அப்படியே ஒப்பிக்கிறாங்க.எந்த வசனமும் சினிமாவுக்காக எழுதப்படுறது தான்.அத நிஜமா நெனச்சு அவங்கள தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க"

"அறிவு விரிவடையும்போது இது சரியாயிடும்யா.விடுங்க."

"என்னமோ.என் கணக்குபடி அடுத்தது கம்ப்யூட்டர் யுகம் தான்.அப்போ இந்த சினிமா பைத்தியம் ஓரளவாச்சும் மாறிடும்."
நம்பிக்கையுடன் சொன்னார் வாத்தியார்.

20.4.2012…………….

"அப்படி என்னடா பாக்குற நாள் பூராவும்?"
கணினியுடன் ஒன்றிப்போயிருந்த தன் பெயரனைக் கேட்டார் வாத்தி.

"நீ 70yrs old man தாத்தா.உனக்கு இதெல்லாம் புரியாது."

"சொல்லுடா புரிஞ்சுக்குறேன்"

"facebook. சொன்ன உடனே புரிஞ்சுடுச்சா?"

"இத பத்தி பத்திரிக்கைல படிச்சிருக்கேன்.நல்ல முயற்சி.ஆனா நாள் முழுக்க இருக்குற அளவுக்கு என்ன இருக்கு இதுல?"

"புடிச்ச விஷயத்த share,like பண்ணுவோம்."

"உருப்படியா என்ன பண்ணுவீங்க?"

"recent happenings பத்தி discuss பண்ணுவோம்."

"எந்த மாதிரி?"

"இந்த மாதிரி" என்று அவன் வாய் சொல்லாமல் விழுங்கியதை விரல் சுட்டிக்காட்டியது.

கண்ணாடி சரிசெய்து கணினித்திரை நோக்கினார் வாத்தி.

"இந்த match தோத்ததுக்குக் காரணம் தோனியா சச்சினா?"
"எங்க xxxx அண்ணா படம் வசூல் 70 கோடி.
உங்க yyyy வசூல் 65கோடி தான்.போங்கடா (தணிக்கை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை)"
"அந்த படம் செம மொக்க.songs வெச்சு ஏமாத்துறாங்க"
 என்று பல உருப்படியான(!) விவாதங்கள்.

மேலும் அதில் groups என்பதன் கீழே இருந்த பெயர்களில் சில‌:
xxxx ஒழிப்பவர் ஒழிக்கும் சங்கம்.
yyyy ஒழிக்கும் சங்கம்.
xxxx வெறியர்கள்.

"எத்தன வருஷம் ஆகட்டும்.தொழில்நுட்பம் எவ்ளோ முன்னேறுனாலும்,எவ்ளோ படிச்சாலும் இவங்க திருந்த மாட்டாங்க.."
மனதில் எண்ணிக் கொண்டே,

"சாப்புட வாடா." பெயரனை அழைத்தார்.

"ஒரு பத்து நிமிஷம் தாத்தா.எங்க தலைவர் படத்த பத்தி ஒருத்தன் தப்பா பேசிட்டான்.அவன நல்ல கிழிச்சிட்டு வரேன்."

ஒரு திறமைசாலியை இரசிப்பது நன்று.
ஆனால் அவர் மேல் வெறிகொண்டு,மற்றவரை வெறுப்பதும் இழிப்பதும்  தவறு.

இரசனைக்கும் வெறிக்கும் உள்ள வேறுபாடை இளைஞர்கள் உணரும் வரை,
இந்தப் போதை தெளியாது.

...................................கந்தசுவாமி.........................

Tuesday, April 17, 2012

கதிர்வீச்சு அபாயம்


கதிர்வீச்சு அபாயம் குறித்து,

மடிகணினியில் குறிப்புகள் எடுத்து,

அலைபேசியை காதால் அரவணைத்து,

அணுஉலை ஆதரித்து வாக்களித்து,

குளிரூட்டிய அறையில் அமர்ந்து,

மின்னஞ்சல் அனுப்புகிறான் மனிதன்.

..........கந்தசுவாமி........

Wednesday, April 4, 2012

பிச்சை


       கன்னியாகுமரி விரைவு வண்டி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தைலிருந்து புறப்பட்டது.
      
       தமிழ்நாட்டில் பெய்யும் கோடை மழை போல் அதிசயமாக,அந்தப் பெட்டியில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
      
       அன்பிற்கினியன் என்று உண்மைப் பெயர் அழைப்போரை கோப‌த்தோடு பார்க்கும் 'அன்பு' இருந்த பகுதியில் அவனையும் சேர்த்து 6 பேர் இருந்தனர்.
      
       விரல்கள் தொட்டுத் தொட்டு மண் நிறம் மாறிய வெள்ளைத் தாள் புத்தகத்தை எத்தனையாவது முறையோ இரசித்துப் படித்துக் கொண்டிருந்த முதியவர்,
      
       விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை பார்த்துக்கொண்டே,வரும் வைகாசியில் அதன் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதுகில் புத்தக மூட்டை கட்டிவிடும் யோசனையில் இருக்கும் தாய்,
      
       தலைகீழாய் பிடித்திருந்த புத்தகத்தில் தலையை மறைத்துக் கொண்டு ஒருவரை அறியாமல் மற்றவரைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துச் சிலிர்த்துக் கொண்டிருந்த இரு இளம் இதயங்கள்.
      
       பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில்,நல்ல சம்பளத்தில் வேலை செய்தாலும்,சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் அவனை சிக்கனம் என்று அவன் ஊர்காரர்கள் அழைக்க,'கஞ்சன்' என்ற பட்டப்பெயர் வைத்திருந்தனர் அவன் சக ஊழியர்கள்.
      
      சிக்கனமா கஞ்சத்தனமா என்றெல்லாம் பெரிதாய் கண்டுகொள்ளாத அவன்,தனக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யும் இக்காலத்தின் பெரும்பாலான இளைஞர்களின் எடுத்துக்காட்டு.
      
      கண்கள் மூடி காதொலிப்பான்களை மாட்டி,rockstar இரசிக்கத் தொடங்கினான்.
       
      ஆயிரம் வித்தியாசமான குணம்கொண்ட மனிதர்களை சுமந்து சென்ற அந்த இரயில்,சென்னையின் எல்லைகள் கடந்து அமைதியாய் இயங்கிக் கொண்டிருந்த சிற்றூர்களை,தன் ஒலிப்பானால் பயமுறுத்திவிட்டு பாய்ந்து சென்றது.
       
      "அண்ணே காசு கொடு" இரண்டு திருநங்கைகள்,யாசகம் கேட்டவாறு வந்தனர்.

சிலர் அவர்களின் தோரணைக்கு பயந்து கொடுக்க,சிலரோ அவர்கள் 'சாபம்' பலிக்கும் என்ற மூடநம்பிக்கையால் 'நமக்கேன் வம்பு' என்று கொடுத்தனர்.

2ரூபாய் கொடுத்தான் அவன்.

"5 ரூபா ஆவது குடுண்ணே"

"எடுக்கறது பிச்சை.இதுல என்னமோ குடுத்துவெச்ச மாதிரி 5ரூபா  கேக்கற?" அவன் அதட்ட,

"சும்மா குடுண்ணே" சளைக்காமல் கேட்டனர்.

"அதெல்லாம் முடியாது.உழைச்சு சாப்புடு.அப்பதான் காசோட அருமை தெரியும்.போ போ." விரட்டினான்.

"வேலை கொடுத்தா நாங்க ஏன் பிச்சை எடுக்க போறோம்" அவர்கள் கேட்க,

"உங்கள மாதிரி நெறைய பேர் இப்போ சாதிக்கிறாங்க.அவங்கள பார்த்து கத்துக்கோங்க.திறமை இருந்தா எல்லாரும் சாதிக்கலாம்"
அவன் சற்றே குரலை உயர்த்திச் சொல்ல,

முகத்தில் பயத்துடன் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் பிள்ளையினை மடியில் ஏற்றி அதனை திசை திருப்ப முயன்றாள் தாய்.

"நீங்க எல்லாம் குடுத்து பழகுறது தான் சார் தப்பு"
அந்த முதியவரிடம் கூறினான்.

"உனக்கு குடுக்க மனசில்லனா குடுக்குற புண்ணியவான கெடுக்காத."
திட்டிவிட்டு நகர்ந்தனர் அந்த திருநங்கைகள்.

"எத்தனை பேர் இவங்களுக்கு வேலை குடுப்பாங்க?
 எத்தனை பேர் இவங்கள ஆதரிச்சு படிக்க உதவி பண்ணுவாங்க?
 கிண்டல் கேலியிலேயே இவங்க திறமை அமுங்கி போயிடுது"
அந்த முதியவர் அவனிடம் சொன்னார்.

"இவங்கள மாதிரி நெறைய பேர் இப்போ நல்ல நிலைல இருக்காங்க.மத்தவங்க இப்படி பிச்சை எடுத்து திரிய உங்கள மாதிரி ஆளுங்க குடுத்து பழக்கறது தான் காரணம்"காட்டமாய் கூறினான் அவன்.

"நீங்க சொல்ற அந்த ஆயிரத்துல ஒரு சாதனையாளர் எல்லாம் அவங்களுக்கு மனசளவுல ஆவது பக்கபலமா ரெண்டு பேர் இருந்ததால தான் எல்லா மனசு வலியையும் பொறுத்து முன்னேறுனாங்க.
இந்த மாதிரி பிச்சை எடுக்குறவங்க எல்லாம் அப்பா அம்மாவாலேயே துரத்திவிடப்பட்டவங்க."

"பிச்சை போடுறதுனால அவங்க மனக்குறைய தீர்க்கவா போறீங்க?"
நக்கலாகக் கேட்டான்.

"அவங்கள ஆதரிச்சு இயக்கம் நடத்துற அளவுக்கு எனக்கு பணமும் நேரமும் இல்ல.என் குடும்பத்தையும் நான் பாக்கணும்.ஆனா அவங்களோட ஒரு வேளை சாப்பாட்டுக்கு உதவ முடியும்.அதான் பண்ணேன்."

"ம்ம்ம்....." கொட்டி முடித்தான் அந்த வாக்குவாதத்தை.

"சே.தெரியாம இந்த பெருசு கிட்ட பேசிட்டன்.மொக்க போட்டு சாவடிச்சுடுச்சு."
தனக்குள் புலம்பியவாறே முறித்திருந்த பாடலைத் தொடர்ந்தான்.
       
        நல்ல வேளை முடித்தார்கள் என்று பிள்ளையை மறுபடி விளையாட இறக்கிவிட்டாள் அவள்.
      
       விழிகளில் பேசிக்கொண்டிருந்த அந்த இளசுகள் இவர்களின் வாய்ப்பேச்சைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.அவர்கள் வேறு உலகத்தில் இருந்தனர்.

       அடுத்த‌ பகுதியில் இருந்த ஒருவரின் மடிகணினியில் படம் ஓட,சந்தானத்தின் குரல் ஒலித்தது.
"ஒவ்வொருத்தருக்கு ஒரு feeling மச்சி"
...............................கந்தசுவாமி................................

Tuesday, March 27, 2012

பேச விடுங்களேன்



கௌதம் வழக்கமாக 5 மணிக்கு கூடைப்பந்து பயிற்சி முடித்து வருவான்.

இன்று வியர்வை துடைத்து,முகம் கழுவுகையில்,சிறிய முள்ளும் பெரிய முள்ளும் சேர்ந்து கடிகாரத்தை சரிபாதியாகப் பிளந்திருந்தது.

ஒரு மணி நேரம் தாமதம்.

அவசர அவசரமாய் கைப்பேசி எடுத்து பார்த்தான்.5 தவறவிட்ட அழைப்புகள்.
உடைமாற்றிவிட்டு மறுபடி அழைக்கலாம் என்று எண்ணிய வேளையில்,
"அழைப்பாயா அழைப்பாயா"
அவன் அழைக்க விழையும் திவ்யா அழைத்தாள்.

தொடுதிரையில் அவன் கைவிரல் அலையாய் கடக்க,
தொடங்கியது அவளின் கோப அலைகள்.

'எத்தனை வாட்டி call பண்றது?ஏன் எடுக்கவே இல்ல?'

'அது வந்து....'

'பேசாத.அவ்ளோதான் இல்ல.என்ன நீ கண்டுக்குரதே இல்ல வர வர.ரொம்ப மாறிட்ட கௌதம் நீ.

‘இல்ல திவ்யா அது ……’

‘என் மேல வெச்சிருந்த லவ் குறைஞ்சுடுச்சு.நான் உனக்கு இம்சை மாதிரி தெரிய ஆரமிச்சுட்டன்ல. சே.இனி உனக்கு call பண்ணவே மாட்டன்.bye'

'திவ்யா திவ்யா...'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மறுபடி அழைக்க முயற்சி செய்தான்.தொடர்பு கொண்ட எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

நூறு ரூபாய் அபராதம் தவிர்க்க,
கடனே என தலைக்கவசம் மாட்டி வண்டியைக் கிளப்ப,

"ஏ ஜிம்பா ஜிஜக்கு ஜிம்பா"
டி.ஆரின் ஆப்பிரிக்க பாடல் ஆர்பரிக்கத் தொடங்கியது அவன் அலைபேசி.

'மச்சான் படத்துக்கு நேரம் ஆச்சுடா.எங்க இருக்க? சீக்கிரம் வா.வரும் போது உன் ஏடிம் கார்டு மறந்துடாதடா.நைட்டு உன் .நீ commit ஆகி 1 வருஷம் ஆச்சுல'

'இல்லடா அது வந்து....'

'மச்சான் 2 ரூபா தான் இருக்கு போன்ல.நீ தியேட்டர் வாசல் வந்துட்டு கால் பண்ணு.bye '

'டேய் டேய் டேய்.....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'உன் போன்ல என்னைக்குடா 2 ரூபாய்க்கு மேல இருந்திருக்கு',
முனங்கியவாறே புறப்பட்டான்.

திரையரங்க வாசல் நெருங்குகையில்,
"ஓட ஓட ஓட தூரம் குறையல"
'கோச்' என மிண்ணியது அலைபேசி திரை.

'கௌதம் நாளைல இருந்து தினமும் 6.30 வரை எல்லாரும் இருந்து விளையாடனும்.மத்தவங்க கிட்டயும் சொல்லிடு'

'சார்,அது வந்து,...'

'நீ தான் பொறுப்பான பையன்.மறக்காம எல்லார் கிட்டயும் சொல்லிடு.bye '

'சார் சார் சார்....'
பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'சே.இந்த போன்ல எதுக்குடா மைக் இருக்கு.எவனாச்சும் அடுத்தவன் பேசுறத காது கொடுத்து கேக்குறானா?அறிவே இல்லாம போன் பேசுறாங்க.'
தனக்குள் புலம்பியவாறு நண்பனைத்தேட,

"காலையில் தினமும் கண் விழித்தால்",அவன் அலைபேசி ஒலித்தது.

'அம்மா நான் friend கூட படத்துக்கு போறன்.நைட்டு சாப்பாடு வேண்டாம்.bye '

'டேய் கௌதம் ஒரு நிமிஷம் டா....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'நான் சொல்றத எங்கயாது கவனிக்குறானா.போன்ல பேசுற அறிவே இல்ல.சே.'

அவன் அம்மா புலம்பிக்கொண்டே,கௌதம் அப்பாவுக்கு போன் செய்தாள்.

'வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வந்துருங்க.
நாதஸ்வரம் ஆரமிக்கபோகுது.வெச்சுடறன்'

அவர் பதில் சொல்வதற்குள்,
பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

..............கந்தசுவாமி............

Saturday, March 17, 2012

மன்னிப்பு


மனிதன் இருக்கும் வரையிலும்,
மண்ணில் இதற்கு மரணமில்லை.
நொடியெல்லாம் புவிமீதே,
ஒடிந்தமனம் ஒட்டுமிது.
பெறுகையில் இனிக்கும்,
தருகையில் கசக்கும்.
கோருபவன் கோவாகிறான்.
கொடுப்பவன் இறையாகிறான்.
.............கந்தசுவாமி.......

இது நம்ம வேலையில்ல


'அந்த கார் வந்த போக்கே சரியில்ல.'

"என்ன இருந்தாலும் வண்டில வந்தவரு கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்.கார் காரணுங்க இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவாங்க."

"1995க்கு அப்புறம் இப்பத்தான் இப்படி ஒரு விபத்த நேர்ல பாக்குறன்.நாளுக்கு நாள் நாடு மோசமாயிட்டே போகுது."

ஆளுக்கு ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அடிபட்டவனைச் சுற்றி நின்று கொண்டு.

"ஒரு 30-35 வயசு இருக்கும்.தலையில நல்ல காயம்.சீக்கிரம் வாங்க."

ஒரு பெரியவர் தன் செல்பேசியில்,108 தொடர்பாளரின் உறக்கம் கலைத்து,உரக்க பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு பழைய மாருதி கார்,அடிபட்டுக் கிடந்தவரை விட அதிகம் சத்தம் போட்டுக்கொண்டு வந்தது.அதிலிருந்து இருவர் இறங்கினர்.

"நான் பக்கத்து ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.என்ன ஆச்சு" அட்டையை நீட்டியபடி வினவினார்.

உடனே அனைவரும் சற்று பின்வாங்க,அனைவரின் முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர்,நடந்ததைச் சொன்னார்.

"ஒரு கார் காரன் காட்டான் மாதிரி வந்தான் சார்.இவரு ஒழுங்காதான் வந்தாரு.இடிச்சிட்டு நிக்காம போயிட்டான் பாவி.பத்து நிமிஷம் இருக்கும் நடந்து"

"அந்த கார் நம்பர் குறிச்சீங்களா?"

"அது வந்த வேகத்துல எங்க சார் நம்பர் எல்லாம் பாக்க."

"சரி.கார் எப்படி இருந்துது பாக்கறதுக்கு?"

"கறுப்பு வண்டி சார்.நல்ல மலமாடு மாரி பெருசா இருந்துச்சு." கடைக்காரர் முடிக்க,

"தண்ணி போட்டுட்டு ஓட்டிட்டு வந்தான்னு நெனைக்குறன்.தாருமாரா வந்தான்"

தன் விசாரணை அறிக்கை அளித்தான் ஒரு மேதாவி.

"ஹைவேயில வண்டி ஓட்டும்போது இவரு தான் சார் பத்திரமா வரணும்"

போன் பெரியவர் சொன்னார்.

"கொஞ்ச நேரம் சும்மா இருங்கய்யா".இது கான்ஸ்டபிள்.

108 தன் ஒலியை எழுப்பியவாறே அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த நாய்களையும் பறவைகளையும் எழுப்பிவிட்டு வந்தது.

காயமடைந்தவர் அவசரமாய் அவசர ஊர்தியில் ஏற்றப்பட,சைரன் ஒலி மீண்டும் எழும்பியது.

அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.

...................................

"யோவ் உனக்கு என்ன சர்க்கரை வியாதியா?பத்து நிமிஷத்துக்கு ஒருதடவ வண்டிய ஓரங்கட்ட சொல்ற".கான்ஸ்டபிளைக் கடிந்த அதிகாரியிடம்,

"ரொம்ப தண்ணி குடிச்சிட்டன் சார்.அதான்."

"வாய்யா சீக்கிரம்"அவர் கத்த,

"சார் அந்த கறுப்பு ஹம்மர் கார்ல ஹைவேஸ் ஓரத்துல நிறுத்தி தண்ணி அடிக்குறாங்க சார்."

பதிலுடன் சேர்த்து பத்தடி தூரத்தில் நடக்கும் கேடையும் சொன்னார் கான்ஸ்.

"விடுய்யா.நாம இப்போ டூடில இல்ல.அப்படியே போய் கேட்டாலும் அமைச்சர்,அது,இதுனு பேசுவாங்க.சீக்கிரம் ஊர் போய் சேரணும்.கண்டுகாம வா போவோம்.இது நம்ம வேலையில்ல."

20 நிமிடங்களுக்கு முன் நடந்தது அதிகாரி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.

....................கந்தசுவாமி.............