Monday, May 31, 2021

விட்ட கதை


தலைப்பைப் பார்த்து ஆபாசக் கதையோன்னு நினைக்க வேண்டாம். 18+ கதையான்னா, ஆமான்னு சொல்லலாம். சில <18க்கும் சம்மந்தம் உண்டு. சில படங்கள் முடிவை வெளிக்காட்டிவிட்டுத் தொடங்கும். இங்க தலைப்பே முடிவைச் சொல்லிட்டு தொடங்குறேன். கிட்டத்தட்ட காதல் ஜோதி க்ளைமேக்ஸ் தீயில வெச்ச மாதிரி. இது ஒரு பழக்கத்த விட்ட கதை.  விட்டொழிச்சவங்களுக்குத் தான் தெரியும் அதன் சிரமம். சிகரெட், சரக்கு தான் இப்போ முக்கால்வாசி பேருக்கு போதை தரும் பேரானந்தம். வேறு பல இலை தழைகள் இருந்தாலும் மேற்சொன்ன இரண்டும் சுலபமாக் கிடைக்கும், போலீஸ் பிரச்சனை இல்லை. சரி, இப்போதைக்கு நம்ம பார்வையைச் சுருக்கிட்டு சுருட்டப் பத்தி மட்டும் பாப்போம். பலர் ஆரமிக்கக் காரணம் நண்பர்கள் தான். அந்த நண்பர் குழுவோட முதல் நண்பரோட முதல் சிகரெட் எப்படின்னு தான் மர்மம். ஒவ்வொருத்தரும் ஏன் ஆரமிச்சாங்கன்னுத் தேடத் தொடங்கினால் தனி ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம்.

சரி, கதையின் நாயகன் ஆரமிச்ச கதைக்கு வரேன். (நாயகன் சிகரெட் பிடிக்கிறது நம்ம ஊர்ல கொண்டாடப்படுற சம்பவமாச்சே, அதான் பேர் சொல்லாம நாயகன்னே சொல்லுவோம்). கூடப் படிச்சவனோ, சினிமாலப் பிடிச்சவனோ  பிடிக்குறார்னு பிடிக்கல. காரணமே இல்லாமத் தொடங்கியது தான். முதல் காதல் மாதிரி முதல் இழுப்பு பெரும்பாலானோர்க்குக் கசப்பு தான். ஆனால் அதைத் தாண்டி, தாக்குப்பிடிச்சு ஒரு நாலு இழு இழுத்துட்டா ஒரு சாதிச்சிட்ட நெனப்பு வரும் பாருங்க... அதுக்கப்புறம் முகேஷ் எத்தனை முறை கண்முன் வந்தாலும் கண்டுக்கமாட்டாங்க‌. அந்தக் கதகதப்பு அப்புடியே வாய் வழியே தொண்டை, மூச்சுக்குழாய் வரைக்கும் பரவி, திரும்ப வெளிவிடும் போது நாசியிலும் பரவும். குளிர் காலங்களில் கேட்கவே வேண்டாம். அருமையா இருக்கும். எல்லா ஜாதி, மதம், கட்சிக்காரனும் சமமாகிடுவாங்க‌ புகையாண்டவர் முன்னே.

"நம் சிகரெட் நம் உரிமை", "சுறுசுறுப்பாக்குது", "மற்றவரோட(சக புகைக்காரர்) சுலபமாக் கலக்க முடியுது", "மூளைக்கு முட்டு கொடுக்குது","என் திறன், கற்பனையக் கூட்டுது" இப்படி எவ்வளவு சமாளிப்புகள். அறியாத வயசுல தெரியாம ஆரமிச்சவன்லாம் முதிர்ச்சி வர‌வர‌ விட முயல்வான். ஆனால் அதைப்பற்றி முழுசாப் புரிஞ்சு, படிச்சு, உள்வாங்கி, கடைசில "எல்லாம் மாயை"ன்னு ஜென் நிலைக்குப் போன பிறகு, ஒரு தம்ம உள் வாங்குனா தான் மனசு குளிரும்(நுரையீரல் வேகும்), தன்னைத் தானே அறிவாளின்னு நம்பும் கூட்டத்துக்கு. வேலைக்குச் சேர்ந்தப் புதுசுல டீ குடிக்கப்  போகும்போதெல்லாம் கடைல வாங்கிட்டு ஒதுங்குற ஆளுகளப் பாத்து, அப்படி என்ன இருக்குன்னு இதுக்கு இவ்ளோ அடிமையாறாங்கன்னு ஒரு கேள்வி. வேற வேலை எதுவும் இல்லாததால, தலைவனும்(கதையின் நாயகன்) ஒன்ன வாங்கிப் பத்த வெச்சான். முரட்டு இருமல். கொஞ்சம் இதயம் வேகமாத் துடிப்பது மாதிரி உணர்வு. லேசானக் குமட்டல். சில மணி நேரம் கழித்து வயிறு மிதமான புரட்டல். இதெல்லாம் முதல் சில நாட்கள் மட்டும். அப்புறம் ஒரே ஜிவ்வுன்னு  இருக்கு தான். நண்பர்களோட சேரும் போது,  சிகரெட் சிங்கங்களோட‌ பத்தோட ஒன்னு பதினொன்னாக் கலப்பது சுலபமா இருந்துச்சு. நாம் விரும்பும்/உயர்வா நினைக்கும் ஒருத்தர் என்ன செஞ்சாலும் அது நமக்கு சரியாத் தெரிய ஒரு கேவலமானத் தர்க்கம் செய்யும் மனசு. அப்படி மேலிருப்பவர், உடனிருப்பவர், பக்கத்து வீட்டுக்காரர்னு டேபிள் மேட் மாதிரி சுற்றுப்புறம் முழுக்க புகைமண்டலமாவேத் தெரியத் தொடங்கியது.

பழக்கம் ஏற்பட, அதற்கு அடிமையாக‌ இரண்டு காரணங்கள். மனதளவில் பற்று, உடலியல் ரீதியாகப் பற்று. நாயகனுக்கு முதலில் மூளை அளவில் பற்று. என்ன இருக்குன்னு பார்க்க ஆர்வம். சிறு பொறி போதுமே காட்டை எரிக்க. நாம் பற்ற வைத்த நெருப்பொன்று, நம்மோடது மட்டுமில்லாம பக்கத்துல இருக்கவங்க‌ நுரையீரல் பூராவும் எரிச்சு விட்ரும்னு தெரியும். ஆனாலும் ஒரு ஈர்ப்பு. தெரிஞ்சே இப்படிப் பண்றியேடான்னு கேட்கிறவங்களுக்கு, சங்கத்து ஆளுங்க சொல்ற பதில், "இது ஒரு வழிப்பாதை". நாலு பேர் நம்மள கெத்தாப் பாப்பாங்கன்னு ஒரு வெத்தான நினைப்பு. அந்தப் பார்வையோட அர்த்தம் கெத்து இல்ல, அருவருப்புன்னு புரியும் முன்னரே மேற்சொன்ன இரண்டு பற்றும் இறுகப்பற்றி,  தலைவன் அடுத்த சிகரெட்டை பற்ற்வைத்துவிடுவார். "ஆறாம் விரல்"னு ஒரு வித்யாசாகர் பாட்ல சிகரெட்ட சிலாகிப்பாங்க. கிட்டத்தட்ட அப்படித்தான். பெருமைக்கு ஆரமிச்சுப் பொறுமையா ஆறாவது விரல் ஆகிடும் சிகரெட். அதனால் எந்தப் பயனும் இல்ல. ஆனால் கூட ஒட்டிக்கிச்சுன்னு வெட்டி விட மனசு வராது.

பிரச்சனை வரும்னு பிரச்சனை வராத அளவுக்குத் தான் வெச்சுக்கிறேன்னு சொல்வாரு நம்மாளு. ஆனாலும் சிலப் பிரச்சனை வராம இல்ல. சில சமயம் அவர் வாய்ல வர நாற்றம் அவருக்கே புடிக்காம வேற வாய வாடகைக்கு வாங்கலாமான்னு தோணும். திடீர்னு யாராச்சும் வந்துட்டா, அடிச்ச தம் வாசம் வெளிய வராம இருக்கப் போட்ட பப்புள் கம் சிகரெட் வாசத்தோட சேர்ந்து ஒரு கன்றாவியான வாசனையக் கொடுக்கும். ஒரு இரவு முழுக்க பஸ்ல‌ போகணும்னா மத்தவங்களுக்கு ஒரு பிரச்சனைனா அவருக்கு கூடுதலா ஒரு பிரச்சனை. சிகரெட்டில்லா டீக்கடைகள் நீரில்லா ஆறா, மண்ணு மாதிரித் தெரியும். பொது இடங்களில் பிடிக்கக்கூடாதுன்னு அரசின் கட்டுப்பாடு. வீட்டுக்குள்ள பயன்படுத்தக்கூடாதுன்னு ஒரு சுயகட்டுப்பாடு. எங்கய்யா போவான் என் கட்சிக்காரன். எவ்வளவு சிரமம் ஒரு மனுசனுக்கு.

காதல் கீதல்னு வந்து நண்பர் ஒருவர். இவனுக்குக் காதலே வராதுன்னு வீட்டுலயே புரிஞ்சுக்கிட்டு பொண்ணு பாத்துக் கல்யாணம் ஆக இன்னொருவர். குழந்தைக்குப் பிடிக்கலன்னு ஒரு மேலதிகாரி. நெருங்கிய சொந்தத்தில் ஒருத்தருக்குப் புற்றுநோய் வந்ததப் பார்த்து, மிரண்டு பயந்த‌ ஒருத்தர். இப்படி ஒவ்வொருவராய் வெளியேறத் தொடங்கினர். மேற்சொன்ன எல்லாரும் எல்லாம் தெரிஞ்சு தான் உள்ளே வந்தார்கள். பல வடிவங்களில் அந்த நியூட்டன்களின் வாழ்க்கையில் ஞான ஆப்பிள்கள் விழுந்தன‌. தலைவனுக்கு மட்டும் இப்படி எதுவுமே நடக்கல. நடந்தாலும் அதன் பாதிப்புல  தலைவன்  மாறுவானான்னு சந்தேகம் தான். அப்பா அம்மா சொல்லியே நிறுத்தலை. புதுசா ஒருப் பொண்ணு வந்து எனக்குப் பிடிச்சத விட்டாத்தான் என்னப் பிடிக்கும்னு சொன்னா அந்தப் பொண்ண எனக்குப் பிடிக்காதுன்னு  ஒரு தர்க்கம். ஆனால் கூட்டம் குறையக் குறைய சிகரெட் ஏறிக்கிட்டேப் போச்சு. ஒரு வெறுமை. அதை நிரப்ப வாயெல்லாம் புகை, கையெல்லாம் கறை. நிறுத்த முடிவெடுக்க யோசிக்கவே நாலு டப்பா சிகரெட் தேவைப்பட்டது.

ஒரு பழக்கத்திலிருந்து வெளிவர ஐந்து நிலைகள் உண்டு. சூழ்நிலை உணர்தல், அந்தப் பழக்கத்தால் மற்றவரோடு ஏற்படும் சிரமங்கள், வெளிவர என்ன வழிமுறைகள் என அறிதல், பழக்கத்திலிருந்து வெளிவருதல், வெளி வந்த நிலையைத் தக்க வைத்தல். நிலை ஒன்றுக்கே வரலன்னா குற்ற உணர்வு இருக்காது. இருப்பதிலேயே கடினமானது நிலை நான்கும் ஐந்தும். அவன் நிலை ஒன்றில் இருந்தான். ஆனால் நிலை இரண்டுக்குச் செல்லப் போதுமான காரணங்கள் இல்லை. அந்தச் சம்பவம் நிகழும் வரை. அது நிகழ்ந்தது. பத்து நாட்கள் சிகரெட்டில்லாமல்  கடத்த வேண்டிய கட்டாயம். நிக்கோட்டின் இல்லாமல் நிலைகொள்ளவில்லை உடல். பேட்ச்(patch) எனப்படும் தோல் வழியே சிறுகச் சிறுக நிக்கோட்டின் தரும் ஒன்றை ஒட்டிக்கொண்டான்.  புகையிலை மற்றும் சார்ந்த பொருட்களுக்கு அடிமையானோர் வெளிவர இது உதவும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான். சிகரெட் சம்மந்தப்பட்ட இடங்களில் இருந்து விலகினான். மீண்டு வந்துவிட்டான். பெருசாத் திருப்பம், ஈடுபாடு இல்லாம இருந்துச்சுல்ல கதை. உண்மை அப்படித்தான் இருக்கும். அதுக்காக தம்மடிச்சிட்டுக் கதை எழுத முடியாது. உயிர் முக்கியமாச்சே.

சரி, சம்பவமா?

கடவாப்பல் எசகுபிசகா வெளிய வந்ததால தாங்க முடியாதப் பல்வலி. சின்ன அறுவை சிகிச்சை செஞ்சு வெளிய‌ எடுத்து, தையல் போட்டு, பெரியத் தலைவலியாப் போச்சு. அந்தப் புண் ஆறும் வரை பல் மருத்துவர் புகை பிடிக்கக்கூடாதுன்னுட்டாங்க. பல் மருத்துவருக்கு அடுத்த கட்டிடமே போதைப் பழக்கத்திலிருந்து வெளிவர உதவும் மையம்  இருந்ததும் உதவியது. வேறு வழியின்றி நிறுத்தியாச்சு. வலி வலியது. 

 

……………….கந்தசுவாமி………………

No comments:

Post a Comment